இனி பெண்களும் பனை மரம் ஏறலாம்! புதிய எந்திரத்தை அறிமுகம் செய்த வேளாண் கல்லூரி
இனி பெண்களும் பனை மரம் ஏறும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளத்தில் உள்ள வ.உ.சி. வேளாண்மை கல்லூரியில் புதிய எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பனை
தமிழகத்தின் மாநில மரமான பனையின் அடி முதல் நுனி வரையிலும் மக்களுக்கு பயன்படுவதால் 'கற்பகத்தரு' என்று போற்றப்படுகிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு சிறந்த இயற்கை உணவாகவும், பனை ஓலை, பனை நார் கூரை வேயவும், கூடை, கட்டில், முறம் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது.
பனை மரம் செங்குத்தாக அதிக உயரமாக இருப்பதால், அதில் ஏறுவது கடினமானது. பல ஆண்டுகளாக பனைத்தொழிலாளர்கள் தங்களது உடல் வலிமையையும், அனுபவத்தையும் பயன்படுத்தியே மரங்களில் ஏறி வருகின்றனர். பனை மரத்தின் உயரம் அதிகமாக இருக்கும்போது, ஏறும் தொழிலாளர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதுடன், பாதுகாப்பு குறித்த அச்சமும் உள்ளது. இதனால் இளம் தலைமுறையினர் பனை மரம் ஏறும் தொழிலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பனை மரத்தில் எளிதாகவும், பாதுகாப்பாகவும் ஏறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹைட்ராலிக் முறையை பயன்படுத்தி இயங்கும் நவீன எந்திரத்தை டிராக்டருடன் இணைத்து பனை மரங்களின் அருகில் எடுத்துச் சென்று, மேலும் கீழும் செல்லுமாறு இயக்கலாம்.


