சுற்றுச்சூழல் சான்று சிக்கல்; கட்டுமானப்பணிகள் பாதிப்பு
திருப்பூர், செப். 7– தமிழகத்தில் சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழுக்கான நுாற்றுக்கணக்கான விண்ணப்பங்கள்
தமிழகத்தில் சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழுக்கான நுாற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதால், கட்டுமானப் பணிகள் முடங்கி, முதலீட்டாளர்களும் பாதிக்கப்படுவதாக கட்டுமான சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவில் அமையும் தொழில்முறை கட்டடங்களுக்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் கட்டாயம். ‘டிடிசிபி’ மூலம் திட்ட அனுமதி பெறும்போது இந்த சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதற்கும் சென்னையில் உள்ள ஒரே அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கப்படுவதால், ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கி கிடக்கின்றன. அனுமதி பெற 9 முதல் 18 மாதங்கள் வரை ஆகிறது.
மேலும், ஏற்கனவே கட்டடங்கள் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் கூடுதல் கட்டுமானத்துக்கு அனுமதி கோரும்போது, அங்கு ஏற்கனவே கட்டுமானம் இருப்பதை காரணம் காட்டி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் தொழில் முனைவோர் புகார் தெரிவிக்கின்றனர்.


