நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுக: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
சென்னை,நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தங்களை திரும்பப்பெற தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல
நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்திருத்தங்களை திரும்பப்பெற தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 'வளர்ச்சி' என்ற போர்வையில் விவசாய நிலங்களை விவசாயமல்லாத பிற பயன்பாடுகளுக்கு மிக எளிதாக மாற்றுவதற்கு வழிவகை செய்யும் வகையில், அரசு மேற்கொண்டு வரும் சட்டத்திருத்தங்களும் அரசாணைகளும் கடும் கண்டனத்திற்குரியவை. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் செப்டம்பர் 8-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் கடந்த ஜூலை 31-ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்ட அரசாணை ஆகியவை வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்திற்கும், நில உரிமைக்கும் விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
கூட்டாட்சித் தத்துவத்தில் மாநில உரிமைகள் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், திட்டப் பரப்பிடம் அல்லாத பகுதிகளில் உள்ள நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கும் பயன்பாடு மாற்றம் செய்வதற்கும் மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நடைமுறையை நீக்கி, அதற்கான அனைத்து அதிகாரங்களையும் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) இயக்குனரிடம் மாநில அரசு வழங்கியுள்ளது. மாநில அளவிலான ஒரே ஒரு அதிகாரியிடம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படும்போது, உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் எல்லைக்குள் நடக்கும் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இழப்பதுடன், உள்ளூர் மக்களின் தேவைகளுக்கோ அல்லது உள்ளாட்சி மன்றங்களின் தீர்மானங்களுக்கோ சட்டப்பூர்வ மதிப்பு குறையும் அபாய நிலை ஏற்படுகிறது.




