சிவகங்கையில் 3,500 பேருக்கு தபாலில் ‛ஸ்மார்ட் கார்டு’ தினமலர் செய்தி எதிரொலி
சிவகங்கை, செப். 17-சிவகங்கையில் பழுதாகி கிடந்த ரேஷன் ‛ஸ்மார்ட்’ கார்டு அச்சிடும் இயந்திரம் குறித்து தினமலரில் செய்தி வெளியான நிலையில், சென்னையில் அச்சிட்டு 3,500 கார்டுகளை வினியோகம் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் புதிய ரேஷன் கார்டு கேட்டும், பழைய கார்டில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவற்றிற்காக 10 ஆயிரம் பேர் வரை வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் ‛ஸ்மார்ட் கார்டு’ அச்சிடும் இயந்திர வசதி இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகங்கையில் இருந்த ரேஷன் கார்டு அச்சிடும் இயந்திரம் பழுதானது. இதனால் புதிய கார்டு, பழைய கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக விண்ணப்பித்தவர்களுக்கு ‛ஸ்மார்ட் கார்டு’ வழங்காமல் கிடப்பில் போட்டனர். இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சிவகங்கைக்கு புதிய ‛ஸ்மார்ட் கார்டு’ அச்சிடும் இயந்திரம் வாங்க ரூ.65 ஆயிரத்தை உணவு பொருள் வழங்கல் துறை கமிஷனர் ஒதுக்கியுள்ளார். அது வரை சென்னையில் அச்சிட்டு வினியோகம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக 6,500 பேர்களுக்கான விண்ணப்பத்தை ஆய்வு செய்ததில், 3000 பேர் புதிய கார்டு கேட்டும், 3,500 பேர் பழைய கார்டில் பெயர், முகவரி திருத்தம் கோரி விண்ணப்பித்திருந்தனர். இதில், பெயர், முகவரி திருத்தம் கோரி விண்ணப்பித்த 3,500 பேர்களின் ‛ஸ்மார்ட் கார்டுகளை’ சென்னையில் அச்சிட்டு சிவகங்கைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் தபாலில் அந்தந்த கார்டுதாரர்களுக்கு ‛ஸ்மார்ட் கார்டு’ வீட்டிற்கே பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். ///

