”இன்பத்தில் துன்பமா? துன்பத்தில் இன்பமா?”; தேர்தல் முடிவையே மாற்றிய ஒரு தாயின் இறுதி நாள்
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த திங்கள்கிழமை எண்ணப்பட்டன. இந்த தேர்தல் முடிவுகள் பல்வேறு விதமான மற்றும் ஆச்சரியமான முடிவுகளைக் கொண்டிருந்தன. அதன்படி, காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் போட்டியிட்ட தலா ஒரு வேட்பாளர், வெவ்வேறு வார்டுகளில் தலா ஒரு வாக்குகள் மட்டுமே வாங்கியிருந்தது பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அதே போல, வேறொரு வார்டில் மற்றொரு அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு ஒரு வாக்குகள் கூட விழவில்லை என்பதைக் கண்டு, அவர் கடும் அதிர்ச்சியுற்றார்.
இது போன்ற பல வித்தியாசமான முடிவுகளுக்கு இடையே ஒரு சுயேச்சை வேட்பாளரின் வெற்றி பேசுபொருளாக மாறியுள்ளது. பரத்பூர் மாவட்டம், நத்பாய் நகராட்சியில் 6 வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜெகதிஷ் பிரசாத் ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதாவது, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் வேட்பாளர் ராம்ஷரன் 150 வாக்குகளைப் பெற்றிருந்தார். இவரை விட ஜெகதிஷ் பிரசாத் ஒரு வாக்கு அதிகமாக, அதாவது 151 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
எனினும், ஜெகதிஷ் பிரசாத்தால் இந்த வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. காரணம், அவரது தாய் வாக்களித்த அடுத்த நாளே, அதாவது வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே உயிர் இழந்தார். இது அவரது குடும்பத்தாரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தாய் வாக்களிப்பதற்கு முன்பே இறந்திருந்தால் ஜெகதிஷ் வெற்றி கேள்விக் குறியாகி இருக்கும்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)