மேட்டுப்பாளையம் தொகுதியில் தொழிற்பேட்டை பொது மக்கள் வலியுறுத்தல்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தொகுதியில், படித்த இளைஞர், இளம் பெண்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் தொகுதியில், மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர் ஆகிய மூன்று நகராட்சிகள், சிறுமுகை, வீரபாண்டி ஆகிய இரண்டு பேரூராட்சிகள், 19 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. காரமடையில் நூல் மில்கள், இரும்பு ஆலைகள், சிறுமுகையில் செயற்கை பட்டு நூல் மில் என, நான்கு பெரிய மில் மற்றும் ஆலைகள் இயங்கின. இதனால் நேரடியாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், மறைமுகமாக பல தொழில் நிறுவனங்கள் வாயிலாக, பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இவர்களின் வாழ்க்கை தரம், உயர்ந்த நிலையில் இருந்தது. பல்வேறு காரணங்களால் கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் நான்கு பெரிய ஆலைகள், மில்களும் மூடப்பட்டன. அனைத்து தொழிலாளர்களும் வேலை இழந்தனர். இவர்கள் வேலை தேடி, கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் மாவட்டங்களுக்கு சென்றனர்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் தற்போது படித்த இளைஞர், இளம்பெண்கள் வேலை தேடி சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளனர். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், மேட்டுப்பாளையத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

