`தரையில படுக்க வைக்கிறாங்க; கேவலமா ட்ரீட் பண்றாங்க’ - திருவண்ணாமலை ஜி.ஹெச் மீது கர்ப்பிணி புகார்
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தரையில் படுக்க வைப்பதாகவும், பயிற்சி இல்லாத பணியாளர்கள் மேற்கொள்ளும் பி.வி பரிசோதனைகளால் காயம் ஏற்படுவதாகவும் கர்ப்பிணிப் பெண் வீடியோ வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார். | pregnant woman lodge complaint against tiruvannamalai government medical college hospital
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களை தரையில் படுக்க வைப்பதாகவும், பயிற்சி இல்லாத மருத்துவ பணியாளர்கள் மேற்கொள்ளும் பி.வி பரிசோதனைகளால் கடுமையான காயம் ஏற்படுவதாகவும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில், மகேப்பேறு வார்டில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் தாய்மார்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும், மருத்துவர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் கவனிக்க மறுப்பதாகவும், தகாத சொற்களால் திட்டி அலட்சியப்படுத்துவதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் பரபரக்கின்றன.
மேலும், ``பி.வி எனப்படும் பிறப்புறுப்புப் பரிசோதனையை தகுதியில்லாத மற்றும் போதிய பயிற்சி இல்லாத சாதாரண பணியாளர் செய்வதால் காயம், ரணம் மற்றும் கடுமையான தொற்று பாதிப்புகள் ஏற்படுகிறது. தவறான அழுத்தத்தால் குழந்தையைப் பாதுகாக்கும் பனிக்குடம் முன்கூட்டியே உடைந்துவிடுகிறது. பிரசவத்தில் சிக்கலையும் ஏற்படுத்துகிறது’’ என்று கர்ப்பிணிப் பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


