ஹிந்து கோயில் இடிப்பு - இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஹிந்து கோயில் உள்நோக்கத்துடன் இடிக்கப்பட்டதாக இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அந்தக் கோயில் மழையில் சேதமடைந்துள்ளதாக, பாகிஸ்தான் அரசு காரணம் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் நரோவல் பகுதியில் உள்ள சிராஜ் கிராமத்தில் மதப் பள்ளி ஒன்றின் அருகே ஹிந்து கோயில் இருந்தது. இந்தக் கோயில் நிலத்தை மதப் பள்ளியுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில் கோயில் கட்டடத்தை அண்மையில் மதவெறி கும்பல் இடித்ததாக, சிறுபான்மையின அமைப்புகள் மற்றும் உள்ளூா் மக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, ஹிந்து கோயில் இடிக்கப்பட்டது குறித்து விரைந்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இடிக்கப்பட்ட கோயிலை மறுசீரமைக்க வேண்டும். அனைத்து சிறுபான்மையினரின் நல்வாழ்வு, பாதுகாப்பு, அவா்களின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் கடமையை பாகிஸ்தான் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

