விலை கொடுத்து நீரை வாங்கி தென்னையை காக்கும் அவலம்
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலையில், 75 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பல லட்சம் தென்னை மரங்கள் நீண்டகால பயிராக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு ஏப்., முதல் ஆக., மாதம் வரை உடுமலை பகுதியில் மழை பதிவாகவில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, கிணறு, போர்வெல்களில் தண்ணீர் குறைந்து விட்டது. ஆயிரம் அடி வரை போர்வெல் அமைத்தாலும், தண்ணீர் கிடைக்கவில்லை.
தென்னை மரங்களை காப்பாற்ற, நீர்வளம் உள்ள பகுதிகளில் இருந்து டிராக்டர் மற்றும் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி, மரங்களுக்கு ஊற்றி வருகின்றனர். ஒரு டிராக்டர் லோடு தண்ணீர், 400 ரூபாய், நிலங்களுக்கு கொண்டு செல்லும் வாடகை 1,100 என, ஒரு லோடு தண்ணீருக்கு, 1,500 ரூபாய் செலவாகிறது என, விவசாயிகள் புலம்புகின்றனர்.


