இலங்கையில் விடுதலையான 9 மீனவர்கள் ஊர் திரும்பினர்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இன்று (செப்.,16) காலை சென்னை விமானம் நிலையம் வந்திறங்கினர்.
ஜூலை 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 9 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். செப்., 3ல் மீனவர்கள் மீதான வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றம், மீனவர்களுக்கு அபராதம் விதித்து விடுவித்தது. இந்த அபராதத்தை மீனவர்களின் உறவினர்கள் சேகரித்து இலங்கையில் உள்ள வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் செலுத்தினர்.
இதையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்களை கொழும்பு அருகே மெரிக்கானா முகாமில் போலீசார் தங்க வைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு கொழும்பில் இருந்து விமானத்தில் புறப்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினர். ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளனர்.


