ஆவணத்துக்காக அலைந்து அலைந்து ஆயுள் காலமே முடிந்து விட்டது: கைத்தறி நெசவாளர்கள் வேதனை
பல்லடம்: கடந்த, 1992ல், பல்லடத்தை அடுத்த, வடுகபாளையம்புதுார் கிராமத்தில் உள்ள, 13 ஏக்கர் பூமி தான நிலம், 292 கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு பிரித்து பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் வீடு கட்டவோ, மின்சார வசதி பெறவோ முடியாமல் அலைந்து கொண்டுள்ளதாக, நெசவாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண, தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க செயலாளர் (சி.ஐ.டி.யு.,) கனகராஜ் கூறியதாவது:
தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு, சென்னை சென்று நிலச் சீர்திருத்த ஆணையாளரை சந்தித்தோம். நில உரிமை ஆவணம் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், அதன் அடிப்படையில், வீட்டுக் கடன், மின் வசதி உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். இதனையடுத்து, பலமுறை கோரிக்கை மனுடன் வந்து, பல்லடம் தாசில்தாரை சந்தித்து வருகிறோம். இங்கோ, 10 நாட்களுக்கு ஒரு தாசில்தார் மாறிவிடுகின்றனர். இவ்வாறு, கடந்த, 1992 முதல் எரத்தாழ, 1,000 மனுக்கள் கொடுத்துள்ளோம். தற்போது, 1,001வது முறையாக நாங்கள் மனு கொடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளோம்.


