பார்டர் தாண்டிய க*சா சாக்லேட்!
உத்தரப்பிரதேசத்திலிருந்து தமிழக கேரள பார்டரான செங்கோட்டைக்கு கடத்தி வரப்பட்ட மாடர்ன் கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. செங்கோட்டையின் கண்ணுப்புளிமெட்டுப் பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருபவர் சிவசுப்பிரமணியன். இவரது நண்பர் செங்கோட்டையைச் சேர்ந்த பாஸ்கரன். சிவசுப்பிரமணியன் டீ கடை நடத்தி வந்தாலும் கஞ்சா விற்பனையில் தொடர்புள்ளவர் என்கிற சந்தேகம் செங்கோட்டை போலீசாருக்கு இருந்து வந்திருக்கிறது.
மேலும் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான அசோக்குமாருக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தச் சூழலில் தகவலின் பேரில் சிவசுப்பிரமணியனின் இருப்பிடத்தைச் செங்கோட்டை போலீசார் சோதனையிட்ட போது செங்கோட்டை சுப்பன்செட்டி பாலப்பகுதியில் சுமார் ஒரு கிலோ எடையிலான 254 கஞ்சா சாக்லேட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சிவசுப்பிரமணியன் அடிக்கடி வட மாநிலங்களில் உள்ள கோவில்களுக்குச் சென்று வருவது வழக்கமாம். இவரது நண்பரான செங்கோட்டை பாஸ்கரன் இருவரும் உத்தரப்பிரதேசம் சென்றவர்கள் அங்கு 5 ரூபாய் மதிப்பிலான சாக்லேட்டில் தயாரான கஞ்சா சாக்லேட்களை கொண்டு வந்து பதுக்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இதுகுறித்து செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்ததுடன் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் தொடர்பாகவும், அவை எங்கிருந்து வாங்கி வரப்பட்டன யாருக்கும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். தவிர இந்த சாக்லேட்கள் பள்ளி மற்றும் கல்லூரி பக்கமிருக்கும் சிறு கடைகளில் விற்பனை செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம். அரிதிலும் அரிதாகச் செங்கோட்டைப் பகுதியில் வடமாநில கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது அந்த வட்டாரத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

