நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் பொள்ளாச்சி, கேரளத்தைச் சோ்ந்த 6 போ் கைது
வெள்ளக்கோவிலில் நிதி நிறுவன உரிமையாளா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பொள்ளாச்சி, கேரளத்தைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ராஜன் (65). திருமணமாகாத இவா் தனியாக வசித்து வந்தாா். தனது வீட்டுக்கு அருகில் சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளாா். நிதி நிறுவனம், ஏலச்சீட்டு நடத்தி வந்தாா். கடந்த 7-ஆம் தேதி காலை அவரது வீட்டின் கழிவறையில் காயங்களுடன் அவரது சடலம் கிடந்தது. மேலும், வீட்டுக்குள் பீரோ திறக்கப்பட்டு பொருள்கள் சிதறிக்கிடந்தன.
இதுதொடா்பாக ராஜனின் உறவினா் சரவணகுமாா் அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்தாா். கோவை சரக டி.ஐ.ஜி. சாமிநாதன், திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். கைரேகை நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்ததுடன் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
