குப்பையாக மாறிய குப்பை சேகரிக்கும் வாகனங்கள் :மக்கள் அதிருப்தி
சிவகாசி:சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பழுதடைந்து குப்பையாக மாறியதால் துாய்மை பணியில் பாதிப்பு ஏற்படுகிறது ..
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் ஒன்று முதல் 24 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சேர்த்து 152 தெருக்கள் உள்ளன. ஆனால் குறைந்த அளவு துாய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர். இப்பகுதியில் குப்பை சேகரிப்பதற்கு என மூன்று வாகனங்கள் மட்டுமே உள்ளது. இதனால் வழக்கம் போலவே சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்படுகின்றது. துாய்மை பணிக்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டிருந்தது. இந்த வாகனங்கள் குறுகிய தெருக்களில் உள்ளே சென்று குப்பை சேகரிப்பதற்கு பயன்பட்டு வந்தது.
ஆனால் தற்போது பேட்டரி வாகனங்களில் 20 க்கும் மேற்பட்டவை சேதம் அடைந்து பயன்பாட்டில் இல்லை. தவிர தள்ளு வண்டிகளும் சேதம் அடைந்துள்ளது. இவை அனைத்தும் திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் வீணாகக் கிடக்கிறது. இதனால் குறுகிய தெருக்களில் குப்பை சேகரிப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது. குப்பை சேகரிக்க வழி இல்லாமல் ரோட்டில் ஆங்காங்கே கொட்டப்படுகின்றது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகின்றது. எனவே திருத்தங்கலில் குப்பை சேகரிக்கும் வாகனங்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
