பைபாசில் எரியாத உயர் கோபுர மின் விளக்குகள்
கம்பம்:சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் பைபாஸ் சந்திப்புக்களில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து எரியாததால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் - குமுளி 170 கி.மீ தூர மாநில நெடுஞ்சாலை ரோட்டை தேசிய நெடுஞ்சாலை துறை இருவழிச்சாலையாக மாற்றியது. இருவழிச்சாலை திட்டத்தில் வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில் பைபாஸ் சாலைகள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போடப்பட்டது. ஒவ்வொரு பைபாஸ் சாலையிலும் நுழையும் மற்றும் வெளியேறும் இடங்களில், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.
ஆனால் உயர் கோபுர மின் விளக்குகள் பராமரிப்பதில் சுணக்கம் காட்டப்படுகிறது. குறிப்பாக சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் பைபாஸ் சாலை சந்திப்புக்களில், உயர் கோபுர மின் விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. சந்திப்பு பகுதியாக இருப்பதால், சரியான பாதை தெரியாமல், இருளில் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. சந்திப்புக்களில் எந்த ஊருக்கு, எந்த ரோட்டில் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு பலகைகளும் இல்லாததால் வெளி மாநில பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை, பைபாஸ் சந்திப்புக்களில் விளக்குகள் எரியவும், அறிவிப்பு பலகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


