“சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை வெண்கலச் சிலையாக மாற்றம்” - நந்தனார் கல்விக் கழகத் தலைவர் உறுதி!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடியில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்குப் பதிலாக, அதே இடத்தில் தனது சொந்த செலவில் புதிய வெண்கலச் சிலை அமைக்கப்படும் என நந்தனார் கல்விக் கழகத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான கே.ஐ. மணிரத்தினம் உறுதியளித்தார்.
சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடியில் சுமார் 40 ஆண்டுகள் பழமையான அம்பேத்கர் சிலை திங்கள்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துச் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரைக் கைது செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நந்தனார் கல்விக் கழகத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான.ஐ. மணிரத்தினம், உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை நேரில் பார்வையிட்டு, சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இந்த சிலையை அனைத்து தரப்பு மக்களும் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்துள்ளனர். தற்போது சிலைக்கு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதே இடத்தில் நந்தனார் கல்விக் கழகம் சார்பில் எனது சொந்த செலவில் புதிய வெண்கலச் சிலை அமைக்கப்படும். இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி தொடக்கப் பள்ளியை மணிரத்தினம் பார்வையிட்டார். இப்பள்ளியில் 6 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில், பள்ளியை மூடும் நிலைக்குச் செல்ல நேரிட்டது இந்த நிலையில் புதிதாகப் பொறுப்பேற்ற தலைமை ஆசிரியை ஈஸ்வரியின் உணர்வுப்பூர்வமான பணியால் மாணவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதனைப் பாராட்டி தலைமை ஆசிரியை ஈஸ்வரிக்குச் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


