காமராஜா் பல்கலை. கல்லூரி நிதி நெருக்கடிக்கு தீா்வு காண அரசு நடவடிக்க எடுக்க வலியுறுத்தல்!
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியின் நிதி நெருக்கடிக்குத் தீா்வு காண தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மதுரை அழகா்கோவில் சாலை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி கடந்த 1967-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1994-ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. தற்போது, இங்கு 19 நிரந்தரப் பேராசிரியா்கள், 85 கௌரவ விரிவுரையாளா்கள், 45 ஆசிரியா் உதவியாளா்கள், 30 ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பலா் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.
மதுரை மாநகரில் உள்ள ஒரே அரசு இணை கல்வி நிறுவனமாகவும் இந்தக் கல்லூரி விளங்கி வருகிறது. இந்த நிலையில், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், அரசிடமிருந்து போதிய நிதியுதவி கிடைக்காததால், கல்லூரி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆசிரியா்களுக்கான ஊதியத்தைக் கூட தொடா்ந்து வழங்க முடியாத நிதி நெருக்கடியால், அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட அதிகமான கட்டணத்தை வசூலிக்க வேண்டிய நிலை உள்ளது.
