வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது; இந்தியா கண்டிப்பு
புதுடில்லி: ஓமன் கடற்கரைக்கு அப்பால், பனாமா நாட்டின் வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கண்டித்தது. இந்தத் தாக்குதலில் காணாமல் போன ஒரு இந்திய மாலுமியை தேடும் பணி நடக்கிறது.
ஓமன் கடல் பகுதியில் பனாமா நாட்டின் கொடியுடன் சென்ற 'எம்டி எல் கையா' என்ற எண்ணெய் கப்பல் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இக்கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளில் 13 பேர் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமன் கடற்கரைக்கு அப்பால் எம்டி எல் கையா என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். கப்பலில் இருந்த 14 இந்தியக் குழுவினரில், இதுவரை 13 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன இந்தியரைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

