திணறல்!
6,000 வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்க முடியாமல்... திருமழிசை பேரூராட்சியில் பாதாள திட்ட பணி அரைகுறை சாலையில் ஓடும் கழிவுநீரால் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறி
திருமழிசை, செப். 18– திருமழிசை பேரூராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் அரைகுறையாக செயல்படுத்தப்பட்டு இருப்பதால், 6,000 குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்க முடியாமல், பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. ஆவணங்களை கணினிமயமாக்குவது உள்ளிட்ட பணிகளில் நிர்வாகம் கவனம் செலுத்துவதால், பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடையாமல், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ளதால், மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சியின் 15 வார்டுகளில், 200க்கும் மேற்பட்ட தெருக்களில், 6,000 குடியிருப்புகளும், 25,000 மக்களும் வசிக்கின்றனர்.
இங்குள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்கான திட்டம் 2007ல் தொடங்கப்பட்டது. மொத்தம் 40.60 கோடி ரூபாய் செலவில், சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் பணி மேற்கொள்ளப்பட்டு 2019ல் நிறைவடைந்து, வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது.
