அந்தமான் கவர்னராக தினேஷ் சர்மா நியமனம்
புதுடில்லி: பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யும், உத்தர பிரதேச முன்னாள் துணை முதல்வருமான தினேஷ் சர்மா, 62, அந்தமான் நிகோபார் தீவுகளின் துணைநிலை கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளின் துணைநிலை கவர்னராக, ஓய்வு பெற்ற அட்மிரல் டி.கே.ஜோஷி, 2017 அக்., 6 முதல் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், புதிய துணைநிலை கவர்னராக, உ.பி.,யில் இருந்து பா.ஜ., சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்வான தினேஷ் சர்மாவை நியமித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தினேஷ் சர்மாவின் எம்.பி., பதவிக்காலம், வரும் நவ., 25ல் முடிவடைகிறது.
இது குறித்து, சமூக வலைதளத்தில் தினேஷ் சர்மா வெளியிட்ட பதிவில், ‘என்னை அந்தமான் நிகோபார் தீவுகளின் துணைநிலை கவர்னராக நியமித்த ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. இந்த புதிய பொறுப்பு, வெறும் பதவியல்ல; மாறாக, நம் அரசியலமைப்பு சட்டம், நாடு மற்றும் மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பு. இந்த கடமையை முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், தேச பக்தியுடனும் நிறைவேற்றுவேன்’ என, குறிப்பிட்டுள்ளார்.


