ஆவின் பால் தட்டுப்பாடு; தனியார் பாலை வாங்கும் நிர்பந்தம் என பொதுமக்கள் வேதனை!
தமிழகத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும் வகையில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் தனி வரவேற்பும், தினசரி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள ஒரு சில கடைகளில் மட்டும் ஆவின் பால் கிடைக்கிறது. உள் சாலைகள், நகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கடைகளுக்கு ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக 1 லிட்டர் பால் ரூ 50-க்கு குறைந்த விலையில் ஆவின் பாலை வாங்கி வந்த பொதுமக்கள், தற்போது ரூ.84 அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிதம்பரம் பகுதியில் ஆவின் பால் கடை நடத்தும் கடைக்காரர் ஒருவர் கூறியதாவது, “கடந்த ஒரு வாரமாக ஆவின் பால் விநியோகம் மிகவும் குறைந்துள்ளது. தினசரி சுமார் 200 லிட்டர் பால் தேவைப்படும் கடைக்கு தற்போது 50 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான பாலை வழங்க முடியவில்லை. இதற்கு முன்பு நகரின் உள் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் கிராமப்புற கடைகளுக்கும் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த பகுதிகளுக்கான விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆவின் பால் வாங்குவதற்காக பொதுமக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளை தேடி வருகின்றனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

