மக்கள் அவதி ஜல்–ஜீவன் பணியால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு உடைப்பை கண்டறிய நகராட்சி அலுவலர்கள் திணறல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி, சுற்றியுள்ள கிராமங்களில் ஜல்–ஜீவன் புதிய குடிநீர் திட்ட பணியில் குழாய் பதிக்கும் போது பழைய குடிநீர் குழாய் உடைந்து விடுகிறது. இதை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய முடியாமல் நகராட்சி அலுவலர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் குடிநீர் பல நாட்கள் வராமல் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.2819 கோடியே 78 லட்சத்தில் நகர், புறநகர் பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், ஜல்–ஜீவன் திட்டத்தில் கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் நகரில் வீதிகளில் குழி தோண்டி புதிதாக குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.
அப்போது பழைய காவிரி குடிநீர் வினியோகக் குழாய் உடைந்து வினியோகம் பாதிக்கப்படுகிறது. சில இடங்களில் குடிநீர் வீணாகி ரோட்டில் பாய்கிறது. இதனால் மக்கள் குடிநீரை குடம் ரூ.13 வரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர். சில இடங்களில் பாதாள சாக்கடை குடிநீரில் கலப்பதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் தினமலர் நகரில் 5 நாட்களாக குடிநீர் வரவில்லை. உடனடியாக உடைப்பை கண்டறிந்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

