தேக்கடி ஏரிக்கரையில் உலா வந்த புலி ரசித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கூடலுார்: தேக்கடி ஏரிக்கரையில் புலி உலா வந்ததை படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
தேக்கடி வனப்பகுதியில் யானை, மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி, கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளும் பறவையினங்களும் உள்ளன. தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே சுற்றியுள்ள வனப் பகுதியில் வனவிலங்குகளை கண்டு ரசிப்பது சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தமாக இருக்கும்.
படகு நிறுத்தப் பகுதியில் இருந்து மனக்கவளை வரை ஒரு மணி நேரம் சென்று திரும்பும் வகையில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை படகுகள் இயக்கப் படுகின்றன.
சுற்றுலா பயணிகள் அதிகமாக மான்கள், காட்டு மாடுகள், யானைகளை கண்டு ரசிப்பார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் மனக்கவளை அருகே ஏரிக்கரையில் உள்ள பாறைகளுக்கு நடுவே புலி உலா வந்ததை படகில் சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் படகை நிறுத்தி போட்டோ எடுத்தனர்.
குடியிருப்பு பகுதிகளிலும், தனியார் விளைநிலங்களிலும் புலி வரும்போது அச்சமடையும் மக்கள் தேக்கடி ஏரிக்கரையில் அதனைக் கண்டு ஆனந்தம் அடைவது சுவராசியமாக உள்ளது என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.