Lifestyle and human interest
கான்கிரீட் வீடு கேட்கிறார்கள் மலைவாழ் மக்கள்

வால்பாறை: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில், கூமாட்டி செட்டில்மென்ட் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வால்பாறை காந்திசிலை வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கூமாட்டி பழங்குடியின மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும். மானாம்பள்ளி பவர் ஹவுஸ்சில் இருந்து கூமாட்டி செட்டில்மென்ட் பகுதிக்கும், வசிக்கும் வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும்.
கூமாட்டியில் தகுதியுள்ள வாக்காளர்களை, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சியில் இணைக்க வேண்டும். முதியோர் உதவித்தொகையை பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அஞ்சலகத்தின் வாயிலாக வழங்க வேண்டும் என்பன, உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.