Lifestyle and human interest
இன்பாக்ஸ்: 'ஹாரிபாட்டர்' தொலைக்காட்சித் தொடர்!

சல்மான் கான் - இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி கூட்டணியில் உருவாகும் படத்தில் நயன்தாரா நாயகி என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள்.
`ஜெயிலர் 2’ படத்தின் சில காட்சிகள் ரீ-ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை EVP ஸ்டூடியோ, கொச்சின் பகுதிகளில் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் விஜய்க்கு எதிராக வசனம் இருந்ததாகவும், அதை நீக்கவே சமீபத்தில் `ஜெயிலர் 2’ ஷூட்டிங் நடந்ததாகவும் புதுப் புரளி கிளம்பியிருக்கிறது. `ஒரு ஜெயிலர் பற்றிய கதைக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்... ஷூட்டிங் ஒரு மாதத்துக்கு முன்பே முடிந்துவிட்டது. அக்டோபர் 15 -ம் தேதி ரிலீஸ் என்கிற அறிவிப்பும் வந்துவிட்டது இந்தச் சூழ்நிலையில் திடீரென பொய்த் தகவல்களை சிலர் பரப்பிவருகின்றனர்’ என்று `ஜெயிலர் 2’ யூனிட் விளக்கம் சொல்லிவருகிறது. புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!
‘அயோத்தி’ படத்தில் பெரும் கவனம் பெற்றவர் இயக்குநர் மந்திரமூர்த்தி. இவரது இயக்கத்தில் 15 கிலோ எடை குறைத்து விஜய் ஆண்டனி நடிக்கிறார். 45 நாள்களில் இந்தப் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல், மந்திரமூர்த்தியின் படத்துக்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ‘நூறு சாமி’ படத்துக்குப் பிறகு தனித்துவமான கேரக்டர்களில், வருடத்துக்கு ஒரு படமாவது நடிக்க விஜய் ஆண்டனி ஆர்வம் காட்டுகிறார். நடிப்பு சாமி!
‘ஹாரி பாட்டர்' தொலைக்காட்சித் தொடரின் புதிய டிரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஜே.கே.ரௌலிங்கின் முதல் புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டது. ஆரம்பத்தில், கதாபாத்திரத் தேர்வு குறித்து சில விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. மேலும், ஒரிஜினல் திரைப்படங்களின் மீதான தாக்கத்தாலும் சில அதிருப்திகள் இருந்தன. எனினும், தற்போது வெளியாகியுள்ள புதிய டிரெய்லரில் துல்லியமான ஹாக்வார்ட்ஸ் காட்சிகள், விஷுவல்கள், மாயாஜால அமைப்புகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இதனால், ஆரம்பகால எதிர்ப்புகள் மறைந்து, இந்தத் தொடருக்கு நேர்மறையான வரவேற்பு பெருகிவருகிறது. கலக்குங்க ஹாரி!
மாரி செல்வராஜ் - இளையராஜா இணையும் ‘மஞ்சணத்தி’ படத்தின் ஷூட்டிங் தேனி பகுதிகளில் ஆரம்பித்திருக்கிறது. கதிர், கயாடு லோஹர், பிரியங்கா மோகன் எனப் பலரும் நடிக்கும் இந்தப் படம் ‘வாழை’ உலகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்கிறார்கள். ‘பைசன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் என இரண்டு ஹீரோயின்களும் முக்கியக் கதாபாத்திரங்களாக மிளிர்ந்ததுபோல, கயாடு & பிரியங்கா இருவரும் வருவார்கள். இந்த ஆண்டே படத்தைத் திரையில் எதிர்பார்க்கலாம். மனம் கவர் மஞ்சணத்திகள்!
சல்மான் கான் - இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி கூட்டணியில் உருவாகும் படத்தில் நயன்தாரா நாயகி என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவரும் நிலையில், அரவிந்த் சாமி முக்கியமானதொரு வேடத்தில் நடிக்கிறார். இந்த பான் இந்தியா படத்தில், இரண்டு இசையமைப்பாளர்களின் பங்களிப்பும் இருக்கிறதாம். அதன்படி, பாடல்களுக்கு தமன், பின்னணி இசைக்கு அனிருத் எனக் கலக்கல் காம்போவைப் பிடித்திருக்கிறது படக்குழு. ‘மான்ஸ்டர்’ என்ற டைட்டில் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகவிருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் மிரளட்டும்!
