Politics
எப்படி இருக்கிறார் கொளத்தூர் MLA வி.எஸ். பாபு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை...!

சுவாசக்கோறு காரணமாக கடந்த 9ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நலன் குறித்து, மருத்துவ நிர்வாகம் சார்பில் இன்றைய தினம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு, வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. தற்போது கொளத்தூர் எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவருக்கு, சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 10ஆம் தேதி காலை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், பல்துறை நிபுணர்கள் குழுவின் பராமரிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, மருத்துவ ரீதியாகத் தேவைப்படும் சுவாச ஆதரவு அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் தற்போது மருத்துவ நிர்வாகம் அவரின் உடல்நிலை குறித்து மற்றுமொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் திரு. வி. எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 9, 2026 முதல் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேரில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்துறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராகவும், மருத்துவ அளவுருக்கள் திருப்திகரமாகவும் உள்ளன. அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் பதிலளித்து வருகிறார்.
கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் ஹெல்த் ரிப்போர்ட்
அவரது ஒட்டுமொத்த உடல்நிலையும் தற்போது சீராக உள்ளது. மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலை முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில் அமைச்சர்கள் பலரும் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையை அணுகி அவரின் உடல்நலன் குறித்து கேட்டறிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
