Health
ஆரோக்கிய அன்னை சர்ச்சில் அருள்தலத் திருவிழா
திருப்புத்துார்:திருப்புத்துாரில் புனித ஆரோக்கிய அன்னை சர்ச்சில் அருள்தலத் திருவிழா நிறைவடைந்தது.
திருப்புத்துார் மதுரை ரோட்டில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சர்ச்சில் அன்னை மரியாளின் பிறந்த நாள் விழா கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு சர்ச்சில் பக்தர்கள் கிறிஸ்தவ பாடல் பாடி ஆரோக்கிய அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடியை புதிதாக கொடி மேடையுடன், அமைக்கப்பட்டுள்ள கம்பம் அருகே வைத்தனர்.
கொடி படத்திற்கு பாதிரியார் பிரிட்டோ ஜெயபாலன் புனித நீர் தெளித்து, துாப ஆராதனை செய்தார். தொடர்ந்து பாதிரியார் அற்புத அரசுடன் இணைந்து புதிய கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றினார். கொடியேற்றத்தை தொடர்ந்து கூட்டுத்திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரண்டாம் நாளில் சப்பர பவனி நடந்தது. பின்னர் பெருவிழா திருப்பலி நடந்தது. அன்னதானத்திற்கு பின்னர் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.