மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் பயணிகளை பதம் பார்க்கும் கம்பி

மானாமதுரை:மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் பொருத்தப்பட்ட இரும்பு கம்பிகளால் பயணிகள் தடுக்கி விழுந்து தினமும் காயமடைந்து வருகின்றனர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை,திருச்சி,விழுப்புரம்,சென்னை,ஈரோடு, கோவை,திருப்பூர்,பரமக்குடி,ராமநாதபுரம் ராமேஸ்வரம்,விருதுநகர்,திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு 300க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
பஸ்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள பிளாட்பாரம் சேதமடையாமல் இருப்பதற்காக இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் முறையாக பொருத்தப்படாமல் வெளியே நீட்டி கொண்டிருப்பதால் நடந்து செல்லும் பயணிகள் தினமும் காயமடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் முறையாக பொருத்தப்படாத கம்பிகளை உடனடியாக அப்புறப்படுத்தி பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.