ஈரோட்டில் 2வது நாளாக கனமழையால் மக்கள் மகிழ்ச்சி
ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று இரவு, 7:10 மணிக்கு மிதமான வேகத்தில் ஆரம்பித்த மழை சில நிமிடங்களில் வலுத்தது. அத்துடன் இடி-மின்னலும் சேர்ந்து வெளுத்து வாங்கியது. அரை மணிநேரத்துக்கு பிறகு சாரலாக மாறி, 8.10 மணி வரை நீடித்தது. பின் மீண்டும் பலத்த காற்றுடன் வேகமெடுத்து, 40 நிமிடங்கள் இடைவிடாமல் கொட்டியது.
கனமழையால் மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை, காளைமாட்டு சிலை உள்ளிட்ட சாலைகளில் வழக்கம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட நேரிட்டது. இரவு, 9:00 மணியை கடந்தும் மிதமான வேகத்தில் மழை தொடர்ந்ததால், இரவில் இதமான சூழல் ஏற்பட்டது. வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறைந்ததால், மக்கள் நிம்மதியாக துாங்கினர். நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாநகர் மட்டுமின்றி, மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இரண்டாவது நாளாக ஈரோட்டில் மழை பெய்தது.