அமெரிக்க பல்கலைக்கு ரூ.190 கோடி நன்கொடை அளித்த இந்திய தம்பதி

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இன்ஜினியர் தம்பதி, 190 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் சின்ஹா, அனுராதா தம்பதி, சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு, உயர் கல்விக்காக பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கு சென்றனர். முதுகலை, பிஎச்.டி., பட்டங்களை பெற்றனர்.
விகாஸ் தற்போது, 'பிராட்காம்' நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். கல்விதான் தங்கள் வாழ்க்கையில் பல கதவுகளைத் திறந்தது, மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என, வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்கு, 190 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.
அந்த பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கல்லுாரிக்கு, இந்த தம்பதியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.