Arts, culture, entertainment and media
சலுகை பிரியாணியால் சிக்கல்; 12 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருவிடைமருதுார்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே, மேலக்காட்டூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 29, திருப்பனந்தாளில் பிரியாணி ஹோட்டல் திறந்தார். திறப்பு விழா சலுகையாக, 'பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என அறிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு, இந்த பிரியாணி வாங்கி சாப்பிட்ட சுசீலா, 60, மகாலட்சுமி, 23, உட்பட, 12 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு பெரியவர்கள் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையிலும், 10 சிறுவர் - சிறுமியர் கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
கோபாலகிருஷ்ணனுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இறைச்சியை சில தினங்களுக்கு முன்பே வாங்கி, 'பிரிஜ்ஜில்' வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பனந்தாள் போலீசார் விசாரித்து வருகின்றனர்.