ராமேஸ்வரத்தில் கடல் அரிப்பால் மரங்கள் சாய்ந்ததால் ஆபத்து
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலோரத்தில் அலைகளால் மண் அரிப்பு ஏற்பட்டு தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இயற்கை சீற்றத்தால் மீனவர் கிராமம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன் உள்ளடக்கிய தீவுப் பகுதியில் வடகிழக்கு, தென்மேற்கு பருவக்காற்றில் மழை பெய்யும். இந்த குளிர் மற்றும் கோடை கால சீசனில் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கடலோரத்தில் மண் அரிப்பு ஏற்படுகிறது. அதன்படி சில மாதங்களாக வீசிய தென்மேற்கு பருவக் காற்றால் ராட்சத அலைகள் எழுந்ததில் ராமேஸ்வரம் ஓலைக்குடா சங்குமால் கடலோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு அங்குள்ள தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
வழக்கமாக சங்குமால் கடலோரத்தில் உள்ள தென்னை மரங்களில் இருந்து 50 அடி துாரத்தில் அலைகள் வீசும். தட்பவெப்ப மாற்றத்தால் தற்போது தென்னை மரங்களை பெயர்த்தெடுத்த நிலையில், எதிர்காலத்தில் இயற்கை சீற்றம் வலுப்பெற்றால் இங்குள்ள மீனவர் கிராமத்திற்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.