இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியுடனான வர்த்தகத்துக்கு 12 நாடுகள் தடை விதிப்பு
லண்டன்: மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தகத்தின் மீது தடை விதிப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் உட்பட, 12 நாடுகள் அறிவித்துள்ளன.
மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரையை தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதுடன், சட்டவிரோத குடியேற்றத்தையும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், அங்குள்ள கிராமங்கள் மற்றும் பொதுமக்கள் மீது இஸ்ரேலில் இருந்து குடியேறியவர்களால் நடத்தப்படும் வன்முறை, மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாகவும் புகார் உள்ளது.
இதையடுத்து, வட அமெரிக்க நாடான கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, அயர்லாந்து, போலந்து, நார்வே, பேர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய 12 நாடுகள் மேற்கு கரையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும், தேசிய அளவிலான சட்டங்களையோ அல்லது ஐரோப்பிய யூனியன் அளவிலான கட்டுப்பாடுகளையோ கொண்டு வர இந்நாடுகள் திட்டமிட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதி விரிவாக்கத்துக்கு நிதியுதவி, கட்டுமான பணிகள், அதற்கான செயல்பாட்டு உதவிகளை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை குறி வைத்தும், அப்பகுதிகளில் நடக்கும் வன்முறைகளில் தொடர்புடையவர்கள் மீதும் தனிப்பட்ட தடைகளை விதிக்க போவதாகவும் இந்நாடுகள் அறிவித்துள்ளன. இம்முடிவுக்கு பாலஸ்தீனமும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.