Arts, culture, entertainment and media
கத்ரீனா கைஃப்: பிரசவத்திற்குப் பின் எதிர்கொண்ட உருவக் கேலி; ₹350 கோடி பிராண்ட் மூலம் பதிலடி!
கத்ரீனா கைஃபின் Kay Beauty ₹350 கோடி விற்பனையை எட்டி சாதனை படைத்துள்ளது. பிரசவத்திற்குப் பிந்தைய உடல் எடையை வைத்து உருவக் கேலி செய்தவர்களுக்கு இதுவே மாபெரும் பதிலடி! Katrina Kaif's Kay Beauty clocks ₹350 crore in sales, shutting down online trolls obsessed with her postpartum weight.

சமூக வலைத்தளங்கள் அவரது உடல் எடையை விவாதித்துக் கொண்டிருந்த அதே வேளையில், நிதி நாளிதழ்களும் வர்த்தக இதழ்களும் கத்ரீனாவின் வணிக வளர்ச்சியைப் வியந்து பாராட்டி வருகின்றன.
ஒரு பெண்ணின் அடையாளம் என்பது அவரது உழைப்பு, தொழில் முனைவுத் திறன், சாதனைகள் ஆகியவற்றில் அடங்கியுள்ளதா அல்லது அவர் காட்டும் உடல் எடையிலும் தோற்றத்திலும் அடங்கியுள்ளதா?
பாலிவுட் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி, தற்போது இந்தியாவின் முன்னணி பெண் தொழில்முனைவோர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கத்ரீனா கைஃப் சந்தித்து வரும் இணைய விமர்சனங்கள் இந்தக் கேள்வியை மீண்டும் பொதுவெளியில் எழுப்பியுள்ளன.
மும்பையில் அண்மையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கத்ரீனா கைஃப் தனது கணவர் விக்கி கௌஷலுடன் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின.
அதில் கத்ரீனா கைஃப்பின் முந்தைய தோற்றத்தையும், தற்போதைய தோற்றத்தையும் ஒப்பிட்டு சில இணையவாசிகள் மோசமான கருத்துகளைப் பதிவிட்டனர்:
"திருமணத்திற்கு முன்பிருந்த கத்ரீனா எங்கே?", "உடல் எடை கூடிவிட்டதால் அவரது திரையுலக வாழ்க்கை முடிந்துவிட்டது" போன்ற எதிர்மறைக் கருத்துகளும், உருவக் கேலிகளும் பேசுபொருளாகின.
ஆனால், கத்ரீனா கைஃப் தனது 40 வயதைக் கடந்த நிலையில் தாய்மையை ஏற்று, அண்மையில்தான் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் உடல் இயல்பான நிலைக்குத் திரும்ப உரிய ஓய்வும் கால அவகாசமும் தேவை என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அவரை விமர்சிப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பல பெண் பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், "ஒரு பெண் தாய்மை அடைந்து தனது உடலை நேசிப்பதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை; ஆரோக்கியமான தாய்மையை ஏற்றுக்கொண்டு பொதுவெளியில் தோன்றும் கத்ரீனா பல கோடி பெண்களுக்கு ஊக்கமளிக்கிறார்" என அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
சமூக வலைத்தளங்கள் அவரது உடல் எடையை விவாதித்துக் கொண்டிருந்த அதே வேளையில், நிதி நாளிதழ்களும் வர்த்தக இதழ்களும் கத்ரீனாவின் வணிக வளர்ச்சியைப் வியந்து பாராட்டி வருகின்றன. அவரது கே பியூட்டி (Kay Beauty) நிறுவனத்தின் வலர்ச்சி FY25-ல் ₹240 கோடியிலிருந்து FY26-ல் ₹350 கோடியாக (சுமார் 46%) அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் மட்டுமன்றி, தற்போது இங்கிலாந்து, மத்தியக் கிழக்கு நாடுகளிலும் விரிவாக்கம் அடைந்துள்ளது. கத்ரீனா இதில் வெறும் விளம்பரத் தூதராக இல்லாமல், தயாரிப்புகளின் தரம் மற்றும் உருவாக்கத்தில் நேரடிப் பங்களிப்பு செய்கிறார்.
கத்ரீனா கைஃப்பின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ₹220 கோடிக்கும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது. ஒரு திரைப்படத்திற்கு ₹10 கோடிக்கும் மேல் ஊதியம் பெறும் இவர், இந்தியாவில் அதிக வரி செலுத்தும், அதிக சொத்து மதிப்பு கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் தொடர்கிறார்.
திரைத்துறையில் ஒரு நடிகை `ஜீரோ சைஸ்’ தோற்றத்துடன் இருக்கும்வரை மட்டுமே அவருக்கு மதிப்பு என்ற குறுகியப் பார்வை இன்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்வது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், தேவையற்ற எதிர்மறை விமர்சனங்களைக் கடந்து, தனது குடும்ப வாழ்க்கையையும், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் ₹350 கோடி அழகு சாதன சாம்ராஜ்யத்தையும் வெற்றிகரமாக வழிநடத்தும் கத்ரீனா கைஃப், உருவக் கேலிகளை விட தன்னுடைய சாதனைகளே பல மடங்கு உரத்துப் பேசும் என்பதை நிரூபித்துள்ளார்.
பிரசவத்திற்குப் பிறகான உடல் மாற்றங்கள் இயற்கையானவை, போற்றத்தக்கவை. அவசரப்பட்டு உடல் எடையைக் குறைக்கும் செயற்கையான அழுத்தங்களுக்கு ஆளாகாமல், தாய்மையின் மாற்றங்களை இயல்பாக ஏற்றுப் புன்னகையுடன் பொதுவெளியில் தோன்றியதன் மூலம், கத்ரீனா பல கோடி தாய்மார்களுக்குத் தன்னுணர்வும் தன்னம்பிக்கையும் அளித்துள்ளார்.
