Politics
தேசிய அளவில் 3வது அணி உருவாகிறதா?: மம்தாவுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு!

பல்வேறு அரசியல் விவகாரங்கள் மற்றும் சந்தர்ப்பங்களில் பிராந்திய கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை தேவை என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கடந்த வாரம் மும்பைக்குச் சென்று, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலே உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை, கனிமொழி சந்தித்துப் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,மம்தா பானர்ஜியைக் கனிமொழி சந்தித்திருப்பது, தேசிய அளவில் பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்பியுள்ளனர். அதாவது 2029ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
முன்னதாக தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், இந்தியா கூட்டணியின் சமீபத்திய கூட்டங்களிலும் திமுக பங்கேற்கவில்லை. அதே சமயம், வரும் மக்களவைத் தேர்தலை திமுக எந்தெந்த கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்திருந்தது. மேலும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பிராந்திய கட்சித் தலைவர்களையும் கனிமொழி சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


