Crime, law and justice
சவுதியில் கொல்லப்பட்ட மீனவர்கள் உடல் அடக்கம்

மயிலாடுதுறை: சவுதி அரேபியாவில், கடற்கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மாவீரன், 40, சங்கர், 39, ஆகியோரது உடல்கள், சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்த மாவீரன், கீழமூவர்கரை சங்கர், 39, திருமுல்லைவாசல் பால்ராஜ், கடலுார் மாவட்டம், சொத்திகுப்பம் மணிகண்டன் ஆகியோர் மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் தங்கி, மீன்பிடி தொழில் செய்தனர்.
இவர்கள், ஆக., 10ம் தேதி நள்ளிரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள், துப்பாக்கியால் சுட்டதில், மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த சங்கர், சவுதி அரேபியா ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆக., 20ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால், மாவீரன், சங்கரின் உடல்கள் நேற்று விமானம் வாயிலாக திருச்சி வந்தடைந்தன.
மீனவர்களின் உடல்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை இருவரின் உடல்களும் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன.

