Politics
“பாரதிதாசனுக்கு ரூ. 48 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது” - சமூக நீதித்துறை விளக்கம்!

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவர் பாரதிதாசன், தமிழக அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.48.22 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “மலேசிய நாட்டில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் மலேசியாவில் திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவம் பிரிவில் முனைவர் பட்டத்திற்கு (Ph.D.) உயர்கல்வி பயின்று வரும் பாரதிதாசன் என்ற மாணவருக்கு, அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானதுஆகும். இத்திட்டத்தின்படி ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என்ற விதிமுறை உள்ள நிலையிலும், பாரதிதாசன் என்ற மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, விதிகளைத் தளர்த்தி இதுவரை மொத்தம் நாற்பத்து எட்டு லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து தொண்ணூற்று ஏழு ரூபாய் (ரூ.48,22,097)கல்வி உதவித்தொகையாக அரசு வழங்கியுள்ளது.
இதில் முதலாமாண்டு படிப்பிற்கான கல்விக்கட்டணம், வாழ்க்கைச் செலவினம், ஆராய்ச்சிச் செலவு ஆகியவற்றுடன், தற்போது இரண்டாமாண்டிற்கான முழு கல்விக்கட்டணம் ரூ.5.57 லட்சம் மற்றும் முதற்கட்ட வாழ்க்கைச் செலவினம் ரூ.6.65 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சமும் அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தொகையைப் பெற்றுக் கொண்ட மாணவர் அதற்கான உரிய செலவின ஆவணங்களையும், பயன்பாட்டு விவரங்களையும் கடந்த 10 மாதங்களாகச் சமர்ப்பிக்காமல் தவிர்த்து வருகிறார்.
உரிய ஆவணங்களை அளிக்காமலேயே, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக அரசுக்கு எதிராகத் தவறான தகவல்களை மாணவர் பரப்பி வருகிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் அரசு எந்தவிதமான தாமதமோ, தடங்கலோ செய்வதில்லை. இத்திட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் (2026-2027) மட்டும் இதுவரை இல்லாத சாதனையாக 362 மாணாக்கர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு பரப்பப்படும் அவதூறுகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)