போலீசார் பணியில் இல்லாததால் ஒரு கி.மீ., காத்திருந்த வாகனங்கள்
தேனி:தேனி அரண்மனை புதுார் ரயில்வே கேட் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால் நெரிசல் ஏற்பட்டு பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ஒரு கி.மீ.,ருக்கு வாகனங்கள் வரிசையாக காத்திருந்தன.
அரண்மனை புதுார் ரயில்வே கேட் நேற்று காலையில் சென்னை வாராந்திர சிறப்பு ரயில், மதுரை பயணிகள் ரயில்களுக்கான மூடப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. ரயில்வே கேட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சுமார் ஒரு கி.மீ., மேல் வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதேபோல் ரயில்வே கேட்டில் இருந்து கொடுவிலார்பட்டி, புது பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடுகளிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதனால் க.விலக்கு செல்ல வேண்டிய 3 ஆம்புலன்சுகள், தாமரைகுளம் ரோட்டில் ஆபத்தான முறையில் கருவேல்நாயக்கன்பட்டி வழியாக மதுரை ரோட்டை சென்றடைந்தன. பாலம் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளதால் தேனி மக்களின் தினசரி பிரச்னையாக மாறிவிட்டது. அரண்மனைபுதுார் பாலம் அருகே வாகன சோதனையில் வழக்கமாக ஆர்வம் காட்டும் போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சரிசெய்ய அங்கு இல்லை. இதனால் தேனியின் முக்கிய நுழைவு பகுதி ஸ்தம்பித்தது. தேனி எஸ்.பி., பிரவீன் கவுதம் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் அதனை சீர்செய்ய போலீசாரை பணியில் நியமிக்கப்பட்டும் அங்கு போலீசார் பணியில் இருப்பது இல்லை.