குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் விருதை நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்
விருத்தாசலம்: விருத்தாசலம் நகர மக்கள் நாளை முதல் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருத்தாசலம் நகராட்சி பகுதியை துாய்மையான, பசுமையான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு, தமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் (இரண்டு தொட்டி முறை) நாளை 12ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. நகர மக்கள் மற்றும் வணிகர்கள் கழிவுகளை, பச்சை மற்றும் நீல நிற தொட்டிகளின் மூலம் தரம் பிரித்து, தினசரி காலையில் வரும் நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மக்கும் குப்பைகள், சமையலறை உணவு கழிவுகள், காய்கறி, பழங்கள், தேயிலைத் துாள், முட்டை ஓடுகள், பூ, இலை, இறைச்சி கழிவுகளை பச்சை நிற தொட்டியிலும், உலர்ந்த மற்றும் மக்காத கழிவுகள், பிளாஸ்டிக், உலோகங்கள், தோல் பொருட்கள்,ரப்பர், கண்ணாடி பொருட்களை நீல நிற தொட்டியிலும், அபாயகரமான மின்னணு கழிவுகள், மருந்துகள், பேட்டரி, பல்பு, பூச்சி கொள்ளி மருந்து பாட்டிலகள், ஊசிகள், டயப்பர்களை கவரில் போட்டு தனியாக வழங்க வேண்டும்.
குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால், துாய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க மாட்டார்கள்.
வணிக நிறுவனங்கள் தங்களின் கடைகளின் முன்பகுதியில் இரண்டு வண்ண குப்பை தொட்டிகளை வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வைத்திருக்க வேண்டும்.
கடைகளை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
நாளை 12ம் தேதி முதல் கழிவுகளைத் தரம் பிரித்து வழங்காதவர்கள் மற்றும் விதிகளை மீறுபவர்கள் மீது நகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும்.
விருத்தாசலம் நகராட்சியை மாநிலத்தில் முதன்மையான துாய்மை நகரமாக மாற்ற அனைவரும் நகராட்சி நிர்வாகத்திற்கு ஆதரவு தரவும்.