மண்டபம் சாலையில் ஓடும் காவிரி குடிநீர்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாம் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி குடிநீர் பெருக்கெடுத்து வீணாகியது.
ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் தெருக் குழாய்களில் காவிரி குடிநீர் விநியோகிக்கின்றனர். இந்த குடிநீர் திருச்சி, ராமநாதபுரம் வழியாக குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது.
ஆனால் காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளால் பல இடங்களில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை பாதுகாக்காமல் அலட்சியமாக உள்ளனர். இந்நிலையில் மண்டபம் முகாமில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குழாய் உடைந்து பல நாட்களாக காவிரி குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.
இந்த வீணாகும் குடிநீரால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி தெருக் குழாயில் சீரான குடிநீர் வழங்க முடியாமல் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் மக்கள் தனியாரிடம் குடிநீர் வாங்கி பருகும் அவல நிலை உள்ளது. எனவே உடையும் குழாய்களை உடனடியாக சரிசெய்து குடிநீரை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.