தமிழகத்தில் இருந்து கைநழுவியது ரூ.15,000 கோடி முதலீடு: மஹாராஷ்டிராவுடன் மசகான் நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை: துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்த, 'மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்' நிறுவனம், மஹாராஷ்டிரா அரசுடன் அதே திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய அரசின், 'மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்' நிறுவனம், 2025 செப்டம்பரில், தமிழக அரசுடன் பு ரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்நிறுவனம், கப்பல் கட்டும் தளம் அமைக்கும் பணிகளை தொடங்கவில்லை.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, மசகான் டாக் நிறுவனத்தின் உயரதிகாரிகள் சில மாதங்களுக்கு முன் சந்தித்து பேசினர்.
அந்நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் திட்டத்திற்கான முதலீடு தமிழகத்தில் இருந்து, ஆந்திரா செல்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டத்தில், 27ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க மஹாராஷ்டிரா அரசுடன், மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழகத்தில் கப்பல் கட்டும் தளத்தில் முதலீடு செய்ய ஓராண்டுக்கு முன் ஒப்பந்தம் செய்த நிறுவனம், நிலம் ஒதுக்குவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது வெளியேறி விட்டதாக தகவல் வெளியா கியுள்ளது.