வட மாநிலத்தில் ஊட்டி பூண்டுக்கு கிராக்கி கிலோ ரூ. 380 வரை ஏலம் போவதால் மகிழ்ச்சி கிலோ ரூ. 380 வரை ஏலம் போவதால் மகிழ்ச்சி

குன்னுார்: வட மாநிலத்தில், ஊட்டி பூண்டு விதைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் விலையேற்றம் கண்டு அதிகபட்சமாக கிலோ, 380 ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியமாக பயிரிடப்படும் சிறப்புமிக்க மலை தோட்ட பயிரான 'ஊட்டி பூண்டு', ஆண்டுதோறும், 5,000 முதல் 6,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து மிகுதியும் தனித்துவமான காரத்தன்மையும் கொண்ட இந்த பூண்டுகளுக்கு சந்தையில் எப்போதும் தனி மவுசு உண்டு.
மேட்டுப்பாளையம் வாரச்சந்தை மற்றும் மொத்த ஏல மையங்களில், ஊட்டி பூண்டின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஞாயிறு வார ஏலத்தில், ஊட்டி பூண்டு ஒரு கிலோ, 220 முதல் 380 ரூபாய் வரை ஏலம் போனது. 'உள்ளூர் நுகர்வுக்கான தேவையை விட, விதை தேவைக்காக வெளிமாநில வியாபாரிகளிடையே நிலவும் போட்டி, இந்த விலை உயர்வுக்கு முதன்மை காரணம்,' என, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். ஊட்டி பூண்டின் முளைப்பு திறனும், நோய் எதிர்ப்பு திறனும் மிக அதிகம் என்பதால், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில், இந்த உயர் ரக பூண்டுகள் வாங்கி செல்கின்றனர்.
பருவ மழை பொய்த்ததால் வழக்கத்தை விட சந்தைக்கு வரத்து சற்று குறைந்துள்ளது. எனினும் விலை உயர்வு மலை தோட்ட விவசாயிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.