அதிகாரிக்கு உதவிய அமைச்சர்; இறுதியில் நேர்ந்த துயரம்

தெலுங்கானா சட்டமன்ற வளாகக் கூட்டத்தொடரின் போது, மின்சாரத் துறை சிறப்புத் தலைமைச் செயலாளர் நவீன் மிட்டலின் தனிச் செயலாளரான ராஜு திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த அமைச்சர் வாகிடி ஸ்ரீஹரி உடனடியாகச் செயல்பட்டு, மயங்கி விழுந்த ராஜுக்கு சிபிஆர் மற்றும் முதலுதவி வழங்கினார். அமைச்சரின் முதலுதவி முயற்சிகள் இருந்தபோதிலும், ராஜுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், அமைச்சரின் இந்த உடனடி உயிர்காக்கும் முயற்சியைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, அவர் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாலேயே அவர் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, இதயத் துடிப்பு திடீரென நின்றுபோனதே இந்த துயர சம்பவத்திற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. எனினும், ராஜுவின் மருத்துவப் பின்னணி மற்றும் அவருக்கு ஏற்பட்ட திடீர் இதயத் துடிப்பு நிறுத்தம் தொடர்பான கூடுதல் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)