Politics
”சட்டமன்றத்தில் எங்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?”; தவெக நிர்வாகியிடம் பணியாளர்கள் சரமாரி கேள்வி

கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் தங்களின் விரக்தியையும் ஆவேசத்தையும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினர்.
அப்போது, "எங்களது நீண்டகாலப் கோரிக்கைகள் குறித்துச் சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எங்களுக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை" என்று பணியாளர்கள் கடுமையாகக் கேள்வி எழுப்பினர்.
மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தும் எவ்விதப் பயனும் இல்லை என்றும், தங்களின் கோரிக்கைகள் மீது நிர்வாகம் எந்தவிதச் செவிசாய்ப்பும் காட்டவில்லை என்றும் பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.
குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், வார விடுமுறைக்கான சம்பளம் மற்றும் ஈஎஸ்ஐ, பிஎஃப் உள்ளிட்ட அடிப்படையான சலுகைகள் கூடக் கிடைக்காமல் தாங்கள் படும் வேதனைகளைத் தவெக நிர்வாகியிடம் பணியாளர்கள் விவரித்தனர்.
ஒப்பந்த முறையை முற்றிலும் ஒழித்து, நேரடியாக மாநகராட்சி மூலமாகச் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சுவார்த்தையின்போது பணியாளர்கள் எழுப்பிய இந்தச் சரமாரி கேள்விகள் தற்போதைய அரசியல் களத்தில் கவனிக்கத்தக்க விவாதமாக மாறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)