பள்ளி உரிமையாளரிடம் ரூ.1.42 கோடி மோசடி
குடியாத்தம்: சமூக வலைதளமான முகநுால் பக்கத்தில் பழகி, 1.42 கோடி ரூபாய் ஏமாற்றிய பெண் மீது, தனியார் பள்ளி உரிமையாளர் மகேஷ், 43, என்பவர், வேலுார் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் மகேஷ் என்பவர் வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனு:
முகநுால் பக்கத்தில், எனக்கு அறிமுகமான கனிமொழி, பல்வேறு தொழில்கள் செய்வதாக கூறி, 'நீங்கள் பங்குதாரராக சேர்ந்தால், அதிக லாபம் கிடைக்கும்' என, ஆசை காட்டினார்.
சில மாதங்களுக்கு முன், ஒரு கோடியே 42 லட்சம் ரூபாயை, அவர் அனுப்பிய வங்கி கணக்குகளுக்கு, பல தவணைகளாக அனுப்பினேன். அதன்பின், அவரை, தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னை ஏமாற்றிய அந்த பெண் உட்பட மோசடி நபர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில், கூறியுள்ளார்.