சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி 14,000 லிட்டர் நந்தினி பால் வீண்

ஹெப்பால்: கே.எம்.எப்., நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்ததில், 14 ஆயிரம் லிட்டர் நந்தினி பால் வீணானது.
பெங்களூரின் ஹெப்பால் மேம்பாலத்தின் இணைப்பு சாலையில், கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு நிறுவனத்துக்கு சொந்தமான டேங்கர் லாரி நேற்று மதியம் சென்றது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடிய லாரி, சாலையோரம் கவிழ்ந்தது. இதில், டேங்கரின் மூடி திறந்ததில், டேங்கருக்குள் இருந்த நந்தினி பால் சாலையில் ஆறாக ஓடியது.
லாரியை ஓட்டி வந்த டிரைவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். அங்கு சென்ற சஞ்சய்நகர் போக்குவரத்து போலீசார், டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சாலையில் ஆறாக ஓடிய பாலை அந்த வழியாக சென்றவர்கள், பாட்டில்களில் பிடித்து சென்றனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின், மூடி மூலம் டேங்கர் அடைக்கப்பட்டது.
கிரேன் இயந்திரம் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த லாரி துாக்கி நிறுத்தப்பட்டது.
சாலையில் கவிழ்ந்த லாரி, சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பால் கூட்டமைப்பு சங்கங்களில் இருந்து பாலை பெற்று கொண்டு, எலஹங்காவில் உள்ள நந்தினி மதர் டெய்ரிக்கு கொண்டு வந்ததும், சாலையில் கவிழ்ந்ததால், 14,000 லிட்டர் பால் வீணானதும் தெரிந்துள்ளது.