Politics
Assembly | சட்டப்பேரவை கூட்டத் தொடர்... 28 நாட்களில் எவ்வளவு நேரம் விவாதம்... எவ்வளவு பேர் பார்த்தனர்?

சட்டப்பேரவை கூட்டத்தொடரை 28 நாட்களில் 32,055 பேர் நேரில் பார்த்தனர். 170 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை 28 நாட்களில் 32 ஆயிரம் பேர் நேரில் பார்வையிட்டுள்ளதாக சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த காலங்களைவிட தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகளை காண ஏராளமானோர் ஆர்வம் காட்டினர். இதுகுறித்து பேசிய சபாநாயகர் ஜெசிடி பிரபாகர், சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்க 28 நாட்களில் மட்டும் 32055 பேர் வந்துள்ளனர் என்றார்.
இது கடந்த ஆண்டுகளை விட மிக அதிகம் என கூறினார். 76 பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவர்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். பொது வாழ்க்கையில் அடுத்த தலைமுறை ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர் என்பதையே இந்த எண்ணிக்கை காட்டுகிறது.
2022 ஆண்டு முழுவதும் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மொத்தமாக வந்தவர்களுடைய எண்ணிக்கை 22651. அதுவே, 2023 ஆம் ஆண்டில் 20137 பேரும், 2024 ஆம் ஆண்டில் 10754 பேரும், 2025 ஆம் ஆண்டு 20123 பேரும் வந்திருக்கிறார்கள். நேரலையில் ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தாலும் உள்ளே என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த 28 நாட்களில் மட்டும் 32055 பேர் வந்திருக்கிறார்கள். சராசரியாக 20 பள்ளி கல்லூரிகள் சேர்ந்த மாணவ, மாணவியர் பார்வையிட வருவார்கள். ஆனால் இந்த தொடரில் 76 பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் வந்துள்ளார்கள்.
இதற்கிடையே, சட்டப்பேரவை நடைபெற்ற 28 நாட்களில் 170 மணி நேரம் விவாதம் நடைபெற்றதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. மொத்தம் 28 நாட்கள் பேரவை நடைபெற்ற நிலையில், 170 மணி நேரம் விவாதம் நடைபெற்றதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
மானியக் கோரிக்கைகளின்போது சுமார் 64 மணி நேரம் விவாதம் நடைபெற்ற நிலையில், திமுகவினர் இருபத்துமூன்றரை மணி நேரம் பேசியுள்ளனர். ஆளும் தவெகவினர் பதிமூன்றரை மணி நேரமும், அதிமுக எம்எல்ஏக்கள் 13 மணி நேரமும் பேசியுள்ளனர். இதனிடையே அவை உரிமைக் குழுத் தலைவராக பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார். மேலும், மதிப்பீட்டுக் குழு, பொதுக்கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு, விதிகள் குழு, நூலக குழு தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
