Crime, law and justice
பழநி மடம் நில மோசடி ஜாமின் மனு தள்ளுபடி * உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தைரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்த வழக்கில் பத்திர எழுத்தரின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். கைதான சேதுபதி, வெள்ளத்துரை, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியன், மடத்தின் அறங்காவலர் முருகதாஸ் ஜாமின் மனுக்களை ஆக.31 ல் உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
கைதான பத்திர எழுத்தர் ஒட்டன்சத்திரம் ஜெயபிரகாஷ் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார்.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான்சத்யன்: சேதுபதி, வெள்ளத்துரை, ஜஸ்டின் மணிகண்டனிடம் மனுதாரர் பலமுறை அலைபேசியில் பேசியுள்ளார். கூட்டுச்சதி நடந்துள்ளது. ஜாமின் அனுமதிக்கக்கூடாது என்றார். இதுபோல் கோயில் நிர்வாகம் தரப்பு வழக்கறிஞர் முரளி ஜாமின் அனுமதிக்க ஆட்சேபம் தெரிவித்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: விற்பனை பத்திரத்தை மனுதாரர் தயாரித்துள்ளார். விசாரணை நிலுவையில் உள்ளது. ஜாமின் அனுமதித்தால் அது விசாரணையை பாதிக்கும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.
