Politics
தடையை மீறி விநாயகர் ஊர்வலம்-: ஹிந்து முன்னணியினர், பெண்கள் 50 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்த ஹிந்து முன்னணியினர், பெண்கள்உள்பட 50 பேரை கைது செய்த போலீசார், சிலையை கைப்பற்றி கோட்டைக் குளத்தில் கரைத்தனர்.
திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோடு குடைப்பாறைப்பட்டியில் மாற்று மதத்தினர் அதிகம் வசிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கட்சி சார்பாகவோ, அமைப்புக்கள், பொதுமக்கள் சார்பாகவோ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த போலீஸ் தடை விதித்துள்ளனர். அதுபோல் இந்தாண்டும் சிலை பிரதிஷ்டை செய்ய போலீஸ் தடை விதித்தது.
இந்நிலை யில் தடையை மீறி ஹிந்து முன்னணி சார்பில் குடைப்பாறைப்பட்டி ஊர் நடுவே உள்ள காளியம்மன் கோயிலில் 3 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து அங்கிருந்து விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள கருப்பண்ணசாமி கோயில் மைதானத்தில் வைத்து பூஜைகள் செய்தனர்.
இதையறிந்து வருவாய்த்துறை சார்பில் அங்கு வந்த மேற்கு தாசில்தார், போலீசார் சிலை பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி விநாயகர் சிலையை பிரதான ரோடு வழியாக மீண்டும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயற்சித்தனர்.
அப்போது பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த 60க்கும் மேற்பட்ட போலீசார், தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற ஹிந்து முன்னணி நிர்வாகிகள், பெண்கள் உட்பட 50 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த 3 அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை கைப்பற்றிய போலீசார், பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்று கோட்டைக்குளத்தில்கரைத்தனர். இச்சம்பவத்தால் குடைப்பாறைப்பட்டியில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டிருந்தனர்.