Politics
பெ. சண்முகம் பேசிக்கொண்டிருக்கும்போது மின்தடை!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் வரும் 27 முதல் 29ஆம் தேதி வரை மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கருத்தரங்கம் இன்று (15.09.2026) நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “நிலம் நமது உரிமை” என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது.இதன் காரணமாக பெ. சண்முகம் மின்சாரம், தனது பேச்சை 5 நிமிடங்கள் நிறுத்தினார். மற்றொருபுறம், ஜெனரேட்டர் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மீண்டும் தனது பேச்சைச் சண்முகம் தொடர்ந்தார்.
திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அரங்கம் இருளில் மூழ்கியது. இதனால் ஒலிபெருக்கியும் செயலிழந்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மின் விநியோகத்தைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. அதன் பின்னரே பெ. சண்முகம் தனது உரையைத் நிறைவு செய்தார். இந்த திடீர் மின் தடையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இந்நிலையில் இதற்குத் தமிழக மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “கும்மிடிப்பூண்டி 33/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் உள்ள 33 கி.வோ. ஏபி சுவிட்ச் கடந்த சனிக்கிழமை முதல் சரியாகச் செயல்படாததால், 15.09.2026 அன்று காலை 11.00 மணியளவில் பழுது நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன்னதாக, இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் சிப்காட் துணை மின் நிலையத்திலிருந்து மாற்றி அளிக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கான இடைவெளியில் காலை 10.50 மணி முதல் 11.00 மணி வரை சுமார் பத்து நிமிடம் மட்டுமே கும்மிடிப்பூண்டி பஜாரில் மின் தடை ஏற்பட்டது. மேலும் இந்த பொதுக்கூட்டம் தொடர்பான எந்த ஒரு தகவலும் மின் வாரியத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை. பின்னர் 33 கி.வோ. சுவிட்ச் பழுது சரி செய்யப்பட்டு, சுமார் 12.05 மணிக்கு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது”எனத் தெரிவிக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)